இவரால் இவர்கள் சொன்னது...

ரஜினி அரசியல் - எதிர்வினை
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

ரஜினி இப்போது அரசியலுக்கு வருவதாகக் கூறவில்லை என்றும், அவர் 2021 - ம் ஆண்டு கட்சிதொடங்குவதாகதான் அறிவித்துள்ளார் என்றும் என் கட்சியினர் என்னிடம் தெரிவித்தனர். அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. அதனை யாராலும் அழிக்க முடியாது.

 (தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதில் இருந்து -  தமிழ் இந்து)

துணை முதல்வர், ஓ.பன்னீர் செல்வம்

அரசியலுக்கு வருவதற்கு ரஜினி உட்பட அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் உரிமை உண்டு. தனிக்கட்சி ஆரம்பிப்பதோ, தேர்தலில் போட்டியிடுவதோ அவரவரின் தனிப்பட்ட உரிமை. ரஜினியை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் தமிழக மக்களின் விருப்பம். அதைப்பற்றி நான் ஒன்றும் கூற இயலாது. ( தமிழ் இந்து)

மக்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை

இப்போது கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எதற்காக கட்சி தொடங்குகிறோம் என்று அவர்களுக்கே கூட தெரியாது. ஆனால் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம்.

 (சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம்& தினகரன் செய்தித்தாள்)

மீன்வளத்துறை  அமைச்சர், டி.ஜெயக்குமார்

வாக்குச்சீட்டு அரசியலில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் ஆதரவைப் பொறுத்துதான் அரசியலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியும். ரஜினியின் வருகையால் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்த ரஜினிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மாலைமலர்)

விளையாட்டுத் துறை அமைச்சர், பாலகிருஷ்ண  ரெட்டி

அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவது நடிகர் ரஜினிகாந்துக்குப் பிடித்த பொழுதுபோக்கு. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வர மிகவும் சிரமப் பட்டனர். அரசியல் என்பது சினிமாவில் நடிப்பதுபோல் இல்லை. மிகவும் கஷ்டமான ஒன்று. ரஜினியின் அரசியல் அறிவிப்பை பொருட்படுத்தத் தேவையில்லை.

(தமிழ் இந்து)

கூட்டுறவுத் துறை அமைச்சர், செல்லூர் கே.ராஜூ

முதலில் அவர் மக்கள் பணியாற்ற வேண்டும். ரஜினி ஏற்கெனவே தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொல்லியுள்ளார். எந்த சிஸ்டம் சரியில்லை என்பதை ரஜினி சொல்ல வேண்டும். அவர் சொன்னால் சரியில்லாத சிஸ்டத்தை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.

(மதுரையில் செய்தியாளர்களிடம், தமிழ் சமயம்.காம்)

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்த் ஒரு வெகுளி. அவரின் குணத்திற்கும், வயதிற்கும் அரசியல் சரிப்பட்டு வராது.  நடிகராக மட்டும் இருப்பது அவருக்கும் நாட்டுக்கும் நல்லது.

 (சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதில் இருந்து, வெப் துனியா.)

முன்னாள் அமைச்சர், வைகைச் செல்வன்

 ரஜினியால் ஒரு போதும் எம்.ஜி.ஆர் போல் ஆக முடியாது. அதிமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என கனவு காண்பவர்களில் இப்போது ரஜினிகாந்தும் சேர்ந்துவிட்டார்.

 (சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதில் இருந்து, புன்னகை.காம்)

ஆர்.ரவிக்குமார்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ரஜினியின் ஆன்மீகத்தின் உட்கூறு இந்து அரசியல்தான். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லி அரசியல் செய்ய முடியாது என்பதால் ஊழல் எதிர்ப்பு, ஆன்மீகம் என்று சொல்கிறார். ரஜினியின் அரசியலை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள், இவருடைய அரசியல் வழிபாட்டு அரசியல் மட்டுமல்ல; வகுப்புவாத அரசியல்.

( தட்ஸ் தமிழ் இணையதளம்)

மு.க. ஸ்டாலின், திமுக செயல் தலைவர்

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு எனது வாழ்த்துகள். ரசிகர்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பிற்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தினால் திமுகவுக்கு சாதக, பாதகமோ, கவலையோ இல்லை. ரஜினி ஏற்றுக்கொண்ட கொள்கை வெற்றியடைய வாழ்த்துக்கள். (சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் – தினத்தந்தி)

திமுக முதன்மைச் செயலாளர், துரைமுருகன்:

 

ரஜினி அரசியலுக்கு யோசித்து யோசித்துதான் வருகிறார். அவரால் திமுகவுக்கு எந்த பாதகமும் இருக்காது. எங்களுடைய பலமே தனி, பாணியே  தனி. அந்தக் களத்தில் யார் வந்தாலும் அதைச் சமாளிக்கக் கூடிய  ஆற்றல் திமுகவுக்கு உள்ளது.

 (சென்னையில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் – தினகரன் செய்தித்தாள்)

தமிழக பாஜக தலைவர், தமிழிசை சௌந்தரராஜன்:

ரஜினிக்கும் அவர் அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். ஊழல் நிர்வாகத்தை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். 2019 தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாகதான் ரஜினி முடிவெடுப்பார் என்பது எனது யூகம்.

 (சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து – தினத்தந்தி)

ஆடிட்டர் குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்

ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் திராவிட இயக்கங்களின் அறுபது ஆண்டுகால அரசியலை மாற்றும் என்றே நம்புகிறேன்.

 (தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா:

சட்டமன்றத் தேர்தலின் போது அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும், அதுவரை தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்குத் துணை போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாக தெரியவருகிறது. அவரது நிலைப்பாட்டை  வரவேற்கவும், வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com